சளித் தொல்லை
ப ருவ மழையும், குளிரும் பாடாய்ப்படுத்துகிறது. குழந்தைகள், முதியவர்கள், உடல் பலவீனமானவர்கள் மட்டுமல்லாமல், பெரும்பாலானோருக்கு தலைவலியில் தொடங்கி ஜலதோஷம், மூக்கடைப்பு, ஒழுகும் மூக்கு, தும்மல், சளி, சைனஸ், கபம் கட்டுதல் என்று மளிகைக்கடை பில் போல நீளுகிறது பிரச்னைகளின் பட்டியல். இவையெல்லாம் தொற்றாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும்... வந்தபின் நிவாரணம் பெறவும், கீழ்க்கண்ட வீட்டு வைத்தியங்களை கடைபிடிக்கலாமே! * குழந்தைகள் தொடங்கி அனைவருமே காலை எழுந்ததும் சூடுபொறுக்கும் வெந்நீரில் முகம் கழுவுவது நல்லது. டீ போடுவதற்காக தேயிலைத் தூளைக் கொதிக்க வைக்கும்போது துளசி அல்லது இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்துக் குடித்தால், சளித்தொல்லைகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். எலுமிச்சை ஜூஸ் அல்லது எலுமிச்சை டீ குடிக்கலாம். இஞ்சி, நெல்லிக்காய், கறிவேப்பிலை போன்றவற்றை அரைத்து சாறு எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு, தேன், தேவைப்பட்டால் சர்க்கரை கலந்து குடித்தால் கூடுதல் பலன் கிடைக்கும். * காலை உணவைச் சூடாக உண்பது நலம். சட்னியில் இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ளுங்கள். த...