சளித் தொல்லை

ருவ மழையும், குளிரும் பாடாய்ப்படுத்துகிறது. குழந்தைகள், முதியவர்கள், உடல் பலவீனமானவர்கள் மட்டுமல்லாமல், பெரும்பாலானோருக்கு தலைவலியில் தொடங்கி ஜலதோஷம், மூக்கடைப்பு, ஒழுகும் மூக்கு, தும்மல், சளி, சைனஸ், கபம் கட்டுதல் என்று மளிகைக்கடை பில் போல நீளுகிறது பிரச்னைகளின் பட்டியல். இவையெல்லாம் தொற்றாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும்... வந்தபின் நிவாரணம் பெறவும், கீழ்க்கண்ட வீட்டு வைத்தியங்களை கடைபிடிக்கலாமே!
* குழந்தைகள் தொடங்கி அனைவருமே காலை எழுந்ததும் சூடுபொறுக்கும் வெந்நீரில் முகம் கழுவுவது நல்லது. டீ போடுவதற்காக தேயிலைத் தூளைக் கொதிக்க வைக்கும்போது துளசி அல்லது இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்துக் குடித்தால், சளித்தொல்லைகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். எலுமிச்சை ஜூஸ் அல்லது எலுமிச்சை டீ குடிக்கலாம். இஞ்சி, நெல்லிக்காய், கறிவேப்பிலை போன்றவற்றை அரைத்து சாறு எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு, தேன், தேவைப்பட்டால் சர்க்கரை கலந்து குடித்தால் கூடுதல் பலன் கிடைக்கும்.
* காலை உணவைச் சூடாக உண்பது நலம். சட்னியில் இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ளுங்கள். தோசை மாவுடன் முசுமுசுக்கை இலையை அரைத்துச் சேர்த்து சுட்டுச் சாப்பிட்டால், நெஞ்சுச்சளியை விரட்டும். உளுந்த மாவுடன் கல்யாண முருங்கை இலையை பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்த்து வடை செய்து சாப்பிட்டாலும் சளிப் பிரச்னைக்கு நல்லது.
* மதிய உணவுக்குச் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்த குழம்பும், தூதுவளை துவையல், இஞ்சி துவையல், கொள்ளு துவையலும் நல்லது. சின்னவெங்காயத்தை பச்சையாக உரித்து மதிய உணவில் சேர்த்து சாப்பிடலாம். மிளகு ரசமும் நல்லது.

* மூக்கடைப்பு இருந்தால், விரலி மஞ்சளை நல்லெண்ணெயில் தோய்த்து எடுத்து தீயில் வாட்டி, அதன் புகையை சுவாசிக்கலாம். நொச்சி இலைகளைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதன் ஆவியை சுவாசிப்பதாலும் மூக்கடைப்பு விலகும். நொச்சி இலை கிடைக்காதவர்கள், வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து மஞ்சள்தூள் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கியதும் போர்வையால் போர்த்தி வேது (ஆவி) பிடித்தால்... தலைபாரம், மூக்கடைப்பு, ஜலதோஷம் சரியாகும். ஜாதிக்காயை நீர்விட்டு உரசி எடுத்துக்கொண்டு, கரண்டியில் வைத்து சூடுபடுத்த வேண்டும். குழம்பு போன்று வந்ததும் மூக்கின் மேல் பற்று போட்டாலும் மூக்கடைப்பு விலகும்.

* தலைபாரம், தும்மல், நீர்கோத்தல் போன்ற பிரச்னைகள் இருந்தால், தலையணை உறையில் நொச்சி இலைகளை வைத்து உறங்க, நிம்மதியான தூக்கம் வரும். நொச்சி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதன் ஆவியை சுவாசித்து வந்தாலும் இந்தப் பிரச்னைகள் நீங்கும்.
சுக்குவெந்நீர் தயாரியுங்கள் இப்படி!

*மாலையில் சுக்கு காபி குடிக்கலாம். இதை சுக்கு காபி என்று சொல்வதைவிட சுக்கு வெந்நீர் என்பதே சரியாக இருக்கும். சுக்கு வெந்நீர் செய்ய... மிளகு 10 கிராம் என்றால், சுக்கு 20 கிராம், 40 கிராம் தனியா (கொத்தமல்லி விதை), நான்கைந்து ஏலக்காய் சேர்த்துப் பொடியாக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, கருப்பட்டி (பனைவெல்லம்) சேர்த்து வடிகட்டிக் குடிக்கலாம். கிடைக்கும்பட்சத்தில்... துளசி, தூதுவளை, ஓமவல்லி இலைகளைச் சேர்த்துக் கொள்ளலாம். சிற்றுண்டி ஏதாவது சாப்பிட விரும்பினால் ஓமவல்லி இலைகளை பஜ்ஜி மாவில் தோய்த்து பஜ்ஜி செய்து சாப்பிடலாம்.

பூண்டுப்பால் தயாரியுங்கள் இப்படி!

* இரவில் உறங்கப்போவதற்கு முன், பூண்டுப்பால் சாப்பிடலாம். பூண்டுப்பால் செய்ய 50 மில்லி பால், 50 மில்லி தண்ணீர், உரித்த பூண்டுப்பற்கள் 10 போட்டு பாதியாக வற்றும் வரை கொதிக்க வைக்க வேண்டும். அடுப்பிலிருந்து கீழே இறக்குவதற்கு முன் 2 சிட்டிகை மஞ்சள்தூள், 2 சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்துக்கொள்ளவும். பிறகு, பனங்கற்கண்டு (இல்லாதபட்சத்தில் சர்க்கரை) சேர்த்து கடைந்து சாப்பிடவும்.

மணத்தக்காளி சூப் வைக்கலாம் இப்படி!

* ஜலதோஷம், தொண்டை கரகரப்பு, இருமல் இருந்தால்... மணத்தக்காளி சூப் நல்ல பலன் தரும். எப்படிச் செய்வது? மணத்தக்காளி கீரை, மிளகு, சீரகம், பூண்டு, சின்னவெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து நீர் விட்டு கொதிக்க வைத்து, பாதியாக வற்றியதும் இறக்கி வடிகட்டி, பொறுக்கும் சூட்டில் குடிக்கவும்.

இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் வீட்டு வைத்தியங்கள் அனைத்துமே பெரிதாக செலவு வைக்காமல், பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாமல், ஆரோக்கியத்தை உங்களுக்குப் பரிசளிக்கக் கூடியவை. இவற்றை தேவையைப் பொறுத்து அனைவருமே மேற்கொள்ளலாம். 

2. அதே போல மிளகுப் பொடியை ஒரு காட்டன்துணியில் முடிந்து காலையில் குளித்ததும் உச்சந்தலையில் தேய்க்க சளி, தும்மல்எல்லாம் பறந்தே போய்விடும்!
3. சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்
4. நெஞ்சு சளிதேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
5. கரைக்கவே முடியாத நெஞ்சில் கட்டிக் கொண்டிருக்கும் சளியைக் கரைக்க,கொள்ளு(காணப்பயறு)சூப் அருமையான மருந்து.
6.கற்பூரவல்லி இலைச் சாறு குடித்தால் சளி குணமாகும்.
7. தூதுவளைக் கீரையை சுத்தம் செய்து, துவையல் செய்து சாப்பிட்டால் சளி குணமாகும்.
8. மழைக் காலத்திலும், பனிக்காலத்திலும் பகல் வேளையில் தூதுவளை ரசம் வைத்துச் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்காது.
9. வெங்காயம் சளியை முறிக்கும்.பொரியல் சாப்பிடும் பொழுது சின்ன வெங்காயத்தை சிறியதாக நறுக்கிக் கலந்து சாப்பிட்டால் சளி கரையும்.
10.சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும். அப்படிப்பட்டவர்கள் நாள்தோறும் தேன் உண்ணுவது மிகுந்த பயனுள்ளது. அதில் வைட்டமின் ‘உ’ இருக்கிறது.வைட்டமின் ‘உ’ ஜலதோஷம் பிடிக்காமல் தடுக்க உதவியாய் இருக்கிறது. 11. துளசி இலையை சாப்பிட்டால் சளி குணமாகும்.
12. சிறு வெங்காயச் சாறு (20 மிலி), தேன் (20 மிலி), இஞ்சிச்சாறு (20 மிலி) இம்மூன்றையும் ஒன்றாக கலந்து ஒருவேளை வீதம் தொடர்ந்து இரு தினங்கள் உணவுக்கு முன் பருகி வர சிறந்த பலனைத் தரும்.
13. ஓமம் பொடி (10 கி.), மஞ்சள்பொடி (20 கி.), பனங்கற்கண்டு (40 கி.), மிளகு பொடி (10 கி.). சூடான பசும்பாலில் மேற்கூறிய நான்கையும் ஒன்றாக கலந்து அதில் 5-8 கிராம் வரை இருவேளை காலை, மாலை பருகி வர உடன் குணம் கிடைக்கும்
14. தும்பைச் செடியின் இலைச்சாறு (10 மிலி), சிறு வெங்காயச் சாறு (10 மிலி), தேன் (5 மிலி). இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து தினமும் மூன்று வேளை வீதம் உணவுக்கு முன் தொடர்ந்து பருகிவர சிறந்த குணம் கிடைக்கும்.
15. சளி, தடுமன்( ஜலதோசம்) அதிகமாக இருந்தால், மிளகு ஒரு ஸ்பூன் எடுத்து நெய்யில் வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளை அரை ஸ்பூன் பொடியினை சாப்பிடுவது நல்லது இரண்டு நாட்களிலே நல்ல குணம் ஆகலாம். ( இது உண்மையாய் எனக்கு குளிர்காலங்களில் அன்டிபயடிக்ஸ் எடுப்பதினை முற்றாக இல்லாமல் செய்கிறது)
16. நன்றாக சளி பிடித்துக் கொண்டு மூக்கு ஒழுகத்தொடங்கினால் மிளகை நன்றாக இடித்து தூள் ஆக்கி வத்துக்கொண்டு தேனில் கலந்து மூன்று முறை ஒவ்வொருநாளும் சாப்பிட்டு வர இரண்டு நாளில் சரியாகப்போயிரும்.
17இரவில் தூங்குவதற்கு முன், பாலில் சிறிது மஞ்சள் தூள், சிறிது மிளகுத்தூள் போட்டு அருந்துங்கள். தொண்டை கரகரப்பு, மூக்கடைப்பு தொந்தரவுகள் நெருங்காதது குரல் இனிமையாக இருக்கும்.
18.தினமும் இரண்டு கைப்பிடி அளவு கொள்ளை ஊறவைத்து, ஒரு துணியில் கட்டி முளைக்க வைத்து, அத்துடன் கொஞ்சம் பால் ஏலக்காய், சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அதைப்பிழிந்து பால் எடுத்துக் குடித்து வர மூட்டுவலி, சளித்தொந்தரவு நீங்கும். ஊள் சதை குரையும்.
19.வறட்டு இருமல் உள்ளவர்கள் சிறிதளவு தேங்காய்பாலுடன் ஒரு கரண்டி தேன், ஒரு கரண்டி கசகசா சேர்த்து குடிக்கவும்.

Comments

Popular posts from this blog

தொப்பையைக் குறைக்க வேண்டுமா?

குடல் புண் (அல்சரை) வயிற்று வலி முழுமையாக குணப்படுத்த இயற்கை வழிகள்.